Publisher's Synopsis
இமயமலைக்குப் பொன்னாடை போர்த்துகிற முயற்சியில் ஈடுபடுவதும், திருக்குறளுக்கு உரை எழுதுவதும் ஒன்றுதான் என்பதை நானறியாதவனல்லன். முன்னூற்று ஐம்பத்து நான்கு குறட்பாக்களைக் கொண்டு குறளோவியம் எழுதி முடித்தபிறகு ஆயிரத்து முன்னூற்று முப்பது குறட்பாக்களுக்கும் உரை எழுத வேண்டும் என்ற ஆர்வத்துடிப்பு என்னை ஆட்கொண்டது. அதனை நிறைவேற்றி மகிழ 'முரசொலி'நாளேட்டில் ஒவ்வொரு நாளும் நான் எழுதிய திருக்குறள் உரைகளின் தொகுப்பே இந்த நூல்.
வள்ளுவர் வாழ்ந்த காலத்து நம்பிக்கைகள், பண்பாடுகள் அவை குறித்து அவரது பார்வை ஆகியவற்றுக்கு மாறுபடாமலும், வலிந்து என்கருத்து எதையும் திணிக்காமலும், குறளில் அவர் கையாண்டுள்ள சொல்லுக்கு இதுவரை உரையாசிரியர்கள் கொண்டுள்ள பொருளையன்னியில் தமிழில் மற்றொரு பொருளும் இருக்கிறது என்ற உண்மை நிலையைக் கடைப்பிடித்து, நான் எண்ணுவது போல் அவர் எண்ணினாரா என்று நோக்காமல் அவர் எண்ணி எழுதியது என்ன என்பதை அறிவதில் மட்டுமே அக்கறை கொண்டு என் அறிவுக்கும் ஆற்றலுக்கும் எட்டியவரையில் இந்தப் பொன்னாடையை நெய்துள்ளேன்.
"கடவுள் வாழ்த்து"எனும் அதிகாரத் தலைப்பை "வழிபாடு"எனக குறித்துள்ளேன். வள்ளுவரைக் கடவுள் மறுப்பாளர் அல்லது கடவுள் நம்பிக்கையாளர் எனும் வாதத்திற்குள் சிக்கவைக்க நான் விரும்பவில்லை. "வழிபாடு"எனும் அதிகாரத்தில் அமைந்துள்ள குறட்பாக்களுக்கு நான் எழுதியுள்ள உரைகளைக் கொண்டு இதனை உணரலாம்.
மற்றும் நான் தரவேண்டிய விளக்கங்கள் பலவற்றை இந்நூலினை வெளியிடும் திருமகள் நிலையத்தார் சார்பாகப் பதிப்புரை தீட்டியுள்ள முனைவர் திரு. நன்னன் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.